மட்டக்களப்பில் பெண்களை வைத்து தகாத தொழில் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில், முன்னாள் மாநகரசபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டுடன் நடாத்திவந்த தங்குவிடுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியை, பொலிசார் முற்றுகையிட்டிருந்தனர்.
இதன்போது, அங்கு தகாத தொழிலில் ஈடுபட்டவர்கள், விடுதியை நடாத்திவந்த முன்னாள் மேயர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மேயருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், 03 மாதங்களின் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 வருடகால வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.