வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை.
வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை பெய்தாலும் பிரச்சினை.
ஆண்டில் 10 நாள் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சேமித்து வைத்தாலே, சென்னையில் ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். வெயில் காலத்திலும் குடிநீருக்கு கவலையின்றி வாழலாம். ஆனால் நம்மிடம் நீரை சேமிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.
மழை பொழிந்தால், நீர் தனது இருப்பிடமான ஏரியை நோக்கி செல்கிறது. ஆனால் சென்னையில் ஏரிகள் மாயமாகிவிட்டதால் அந்த நீர் குடியிருப்பை சூழ்ந்து நின்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சென்னையின் வளர்ச்சிக்கு பின்னால் மாபெரும் இயற்கை அழிப்பு அரங்கேறி உள்ளது. இயற்கை நமக்கு அளித்த நீர்நிலைகள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் கடந்த 1893-ம் ஆண்டில் 60 ஏரிகள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 28 ஏரிகள்தான் உள்ளன. 32 ஏரிகளும், அதன் வழித்தடங்களும் இல்லாமல் போய் விட்டன. தற்போது இருக்கும் 28 ஏரிகளுக்கும் நீர் வரும் வழித்தடங்கள் எல்லாம் சுருங்கி போய், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன.
இதனால் மழைநீர் வழிந்தோடுவதில் தடை உள்ளது. கடந்த காலங்களில் வங்கக்கடலில் புயல் உருவானால் அது ஆந்திராவையும், ஒடிசாவையும் தான் பெருமளவில் தாக்கும். ஆனால் இயற்கை மாற்றத்தால் தற்போது சென்னையை தாக்கும் நிகழ்வுகள் தொடங்கி விட்டன. சென்னை மாநகரம் அவ்வப்போது நீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்க வேண்டிய மழை, சென்னை மக்களை இப்போது பயமுறுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காண நீர் நிலைகள் மீது கட்டப்பட்டு இருக்கும் அத்தனை கட்டிடங்களையும் இடித்து மீண்டும் நீர்நிலைகளை உருவாக்க முடியுமா?
அப்படி செய்ய முடிவெடுத்தால் சென்னையில் மூன்றில் ஒரு பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். இது கடலில் விழுந்த மழை துளியை தேடுவதற்கு சமம் ஆகும்.
உலகெங்கும் நகரங்கள் உருவானபோது பல நாடுகளிலும் இதுபோன்ற இயற்கை அழிப்புகள் நடந்து இருக்கின்றன. அதற்கு அந்த நாடுகள் தற்போது தீர்வும், பரிகாரமும் தேடிக்கொண்டு இருக்கின்றன. இயற்கையை அழித்து விட்டு, அவற்றை செயற்கையாக தற்போது உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தது. அங்குள்ள வீடுகள் எல்லாம் பல நாட்கள் நீரில் மிதக்கும். அதற்கு அவர்கள் கண்ட தீர்வுதான் பூமிக்கடியில் நீர் வெளியேற்றும் வாய்க்கால் திட்டம்.
டோக்கியோவின் மேல்பரப்பில் இருந்த வாய்க்கால், நீர்நிலைகள் எல்லாம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழும்பி விட்டன. அதனால் அவர்கள் செயற்கையாக பூமிக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் மழை நீர் செல்லும் மிகப்பெரும் சுரங்கத்தை (செயற்கை வாய்க்கால்) உருவாக்கினர். இந்த சுரங்கத்தின் முடிவில், பூமிக்கடியில் மிகப்பெரும் நீர் சேமிப்பு தொட்டிகளை கட்டினர். இந்த தொட்டிகள் 6 கால்பந்து மைதானம் அளவு கொண்டது. சுரங்கத்தின் வழியாக வரும் மழை நீர், சேமிப்பு தொட்டியில் வந்து சேருகிறது. பின்னர் இந்த சேமிப்பு தொட்டியில் இருக்கும் நீர், ராட்சத குழாய்கள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு அதன் அருகில் உள்ள எடவா ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. சேமிப்பு தொட்டிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்கு 7 ஆயிரம் கன அடி நீரை ஆற்றில் வெளியேற்றுகிறார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது மழை வெள்ள பாதிப்பில் இருந்து டோக்கியோ நகரம் முழுமையாக தன்னை காத்து கொள்கிறது. வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்தல் மற்றும் மழை நீரை முழுவதுமாக சேகரித்தல் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை இந்த திட்டத்தின் மூலம் செய்து வெற்றி பெற்று இருக்கிறது ஜப்பான்.
இந்த திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கி 2006-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்காக செலவான தொகை இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். மழை வெள்ளத்தில் இருந்து பூமிக்கடியில் கட்டப்பட்ட சேமிப்பு தொட்டி தங்களை காப்பதால் ஜப்பான் மக்கள் அதனை பூமிக்கடியில் ஒரு கோவில் என்றுதான் சொல்கின்றனர். ஜப்பானின் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா உள்பட பல நாடுகளும் பின்பற்றி வருகின்றன.