இலங்கையில் சினிமாத் துறையில் பல பிரபல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை, சர்வதேச புகழ்பெற்ற திறமைவாய்ந்த அதிகமான சினிமா கலைஞர்களை உலக சினிமாவுக்கு வழங்கியுள்ளது.
ஆனாலும், உள்ளூர் சினிமாத்துறை, ஒரு தொழிற்துறையாக சட்டரீதியாக வெளியிடப்படாமையால் அதன் அளவும் விருத்தியும் சிறியளவில் உள்ளூர் வணிக வாய்ப்புக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கொவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக உள்ளூர் சினிமாத்துறை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. சினிமாத்துறையை முன்னேற்றுதல் மற்றும் ஊக்குவிப்பதன் மூலம் பல வாழ்வாதார வழிகள் உருவாதல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நவீனமயப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் கல்வி போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தல் போன்ற பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதேபோல் உலகில் முன்னேற்றகரமான சினிமா தொழிற்துறை காணப்படும் நாடுகளில் அந்தந்த நாடுகள் சினிமாத்துறையை ஒரு தொழிற்துறையாக ஏற்றுக்கொண்ட பின்னரே குறித்த தொழிற்துறையின் விருத்தி ஏற்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. அ
தற்கமைய, எமது நாட்டின் சினிமாத்துறையின் மேம்பாட்டுக்காகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் சினிமாவை தொழிற்துறையாக பதிவு செய்வதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.