இம்முறை தேசியப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் போது, பாடத்திட்டங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வினாத்தாள் தயாரிப்பில் பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பரவி வரும் வதந்திகள் தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளளார்.
தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில அரச பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். மற்றும் சிக்கலான பாடத்திட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சில ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னும் சில ஆசிரியர்கள், இலகுவான பாடத்திட்டங்கள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
குறித்த பரீட்சைகளை எழுதுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பாடத்திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.