இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும். ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் நான் விரும்பவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று என்னை விமர்சிப்பவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர். ஒரு தரப்பு தான், கடந்த 02 வருடங்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள் கடந்த இரண்டு வருடங்கள் சாதாரணமான நிலையைக் கொண்ட வருடங்கள் என்று.
ஆனால், நான் மட்டுமன்றி முழு உலகத் தலைவர்களும் கொவிட் தொற்று நோய் பரவிய இந்த இரண்டு வருடங்களில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்தோம். அடுத்த தரப்பினர், புரட்சிகரமான மாற்றத்துக்காக என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் அந்த மாற்றத்தை செயற்படுத்தும் போது பலருக்கு விருப்பமில்லை. அவ்வாறு உள்ளவர்கள் தான் என்னை விமர்சிக்கிறார்கள். நான் ஜனாதிபதியாக பதவியேற்றது நவம்பர் 19ஆம் திகதி ஆகும். டிசம்பர் மாதம் ஆகும்போது, சீனாவின் வூஹான் நகரில் இந்த கொரோனா தொற்று நோய் பரவியது.
இந்தத் தொற்றுநோய் என்னவென்றும் நாம் இதற்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி இருக்கின்றதா என்றும் அன்று உலகத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த நிலைமையின் கீழ் தான் வூஹான் நகரில் கல்வி கற்றுக் கொண்டிருந்த 34 மாணவர்களை இலங்கைக்கு அழைத்துவர வேண்டி ஏற்பட்டது.
நாம் விசேட விமானத்தின் மூலம் மிகவும் சுகாதார வழிகாட்டலுடன் மத்தல விமான நிலையத்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விசேட பாதுகாப்புடன் தியத்தலாவை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று, தனியானதொரு பிரிவை அமைத்து அவர்களை தனிமைப்படுத்தினோம். அன்று முதல் நாம் தனிமைப்படுத்தல்களை ஆரம்பித்தோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்த ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்களை இலங்கைக்கு வரவழைத்து அவர்களையும் தனிமைப்படுத்தினோம். இந்நாட்டை பத்து தடவைகளுக்கும் மேல் மூடவேண்டி ஏற்பட்டது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும், கடந்த வருடத்தில் தொடர்ந்து இரண்டரை மாதங்கள் நாடு மூடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலைமையில் எனக்கு பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா? அந்நிலையைப் பற்றி பலர் புரிந்து கொள்வதில்லை. புரிந்துகொள்ள விடுவதுமில்லை. அவ்வாறான நிலைமையின் மத்தியில் தான் கடந்த இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தேன்.
எங்கேயாவது ஒரு தொற்று நோயாளர் இனங்காணப்பட்டவுடன், வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் உடனே நாட்டை மூடுமாறும் இல்லையாயின் அழிவுகள் ஏற்படுமென்றும் கூறுகின்றனர்.
அவ்வாறான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. நாட்டை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் போதும் எதிர்க்கட்சியினர் நாட்டை மூடுமாறு கூக்குரல் இடுகின்றனர். நாட்டை மூடும்போது எதிர்க்கட்சியினர் திறக்குமாறு கூக்குரல் இடுகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக 05 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு அந்நிய செலாவணியை கொண்டுவந்த சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியை கண்டது. எம்மைப் போன்ற சிறிய பொருளாதார நிலையில் உள்ள ஒரு நாடு 05 பில்லியன் டொலர்களை இழப்பது, பொருளாதாரத்துக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் அறிவீர்கள்.
அதுமட்டுமன்றி பாரியளவிலான சுற்றுலாக் கைத்தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். உயர் தரத்திலான ஹோட்டல்கள் முதல், இளநீர் விற்பனை செய்கின்ற நபர்கள் வரை 03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களின் வருமானம் முழுமையாக வீழ்ச்சி கண்டது. நாம் நாட்டை மூடும்போது சிறிய கடைகளை நடத்துகின்ற வியாபாரிகள் முதல் பெரிய வர்த்தகர்கள் வரை அனைவரதும் பொருளாதாரம் பாதிப்படைந்தது. ஆரம்ப கட்டத்தில் ஆடை தொழிற்சாலைகளை மூடியதன் காரணமாக எமது ஏற்றுமதி வருமானம் இல்லாமல் போனது. தற்போது நாம் அதனை மீண்டும் ஆரம்பித்திருக்கிறோம்.
அதேபோன்று, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வந்த கிட்டத்தட்ட 02 இலட்சம் பேர் தொழில்களை இழந்தனர். அதற்கு காரணம், அந்நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதினாலாகும். நாம் அவர்களை இலங்கைக்கு வரவழைத்தோம். அவர்கள் மூலம் இந்நாட்டுக்கு கிடைத்து வந்த வருமானத்தை நாம் இழந்துள்ளோம்.
இவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும், கடந்த அரசாங்கம் வாங்கிய கடன்களை, வருடத்துக்கு 04 பில்லியன் டொலர்களை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி ஏற்பட்டது. நாம் இந்த இரண்டு வருடத்துக்குள் அக்கடனையும் செலுத்தினோம். அதற்கு மேலதிகமாக, வட்டியாக 1.5 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும். அவற்றையும் நாம் செலுத்தினோம்.
மிகவும் குறைந்த நிதி கையிறுப்புடனேயே கடந்த அரசாங்கம் எமக்கு இந்த நாட்டைக் கையளித்தது. இந்தக் கொவிட் நோய்த் தொற்றின் காரணமாக நாம் இழந்த அந்நியச் செலாவணி, நாம் திரும்பிச் செலுத்த வேண்டிய கடன்களைப் பார்க்கும்போது சிறிய பொருளாதாரம் ஒன்றை முன்னோக்கிக் கொண்டு செல்வது எவ்வளவு கடினம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு இருந்தாலும், நாம் அரச ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தோம். இணைய வழியில் கடமையாற்றச் செய்தோம். நாம் அவர்களின் சம்பளத்தை நிறுத்தவில்லை. அவர்கள் அனைவருக்கும் சம்பளத்தை வழங்கினோம். ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக வீட்டிலேயே இருந்தனர். நாம் அவர்களுக்கும் சம்பளத்தை வழங்கினோம்.
கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாம் பணத்தை வழங்கினோம். இவ்வாறான கஷ்டமான நிலைமையிலும் நாம் மக்களை வாழவைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். இன்று விவசாயிகள் என்று ஒரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், விவசாயிகளை வாழ வைத்தது எந்த அரசாங்கம் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் அதிகாரத்துக்கு வரும் போது, 25 ரூபாய்க்குகூட நெல்லை விற்க முடியாத நிலை காணப்பட்டது. “எமக்கு குறைந்தது 40 ரூபாயாவது தாருங்கள்” என்று, ஒரு விவசாயி கூறுவதை நான் செய்திகளில் பார்த்தேன். நாம் அதனைவிட அதிகமாக வழங்கினோம்.
அதேபோன்று, அன்று உரத்துக்கும் பணம் செலுத்தினர். நான் ஆட்சிக்கு வந்து உரத்தை இலவசமாக வழங்கினேன். அன்று 25 ரூபாய்க்கு விற்க முடியாதிருந்த நெல்லுக்கு 50 ரூபாய் நிர்ணய விலையை வழங்கினேன்.
அவ்வாறு 50 ரூபாய் நிர்ணய விலையை வழங்கினாலும், இன்று 60, 70, 80 ரூபாய்களுக்கும் விற்கப்படுகின்றது. பரவாயில்லை. அந்தப் பணம் விவசாயிகளுக்கே செல்கின்றது. இரண்டு வருடங்களாக நாங்கள் இரசாயன உரத்தை இலவசமாக வழங்கினோம். அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் எனக்கு வாக்களித்தது,
என்னுடைய முகத்தைப் பார்த்து அல்ல. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் மூலம் நான் முன்வைத்த கொள்கைகளுக்கே ஆகும். அக்கொள்கைகளில் தெளிவாக குறிப்பிட்டேன், நாம் பசுமை விவசாயத்தை நோக்கி செல்வோம் என்று தெளிவாகக் குறிப்பிட்டோம்.
இந்நாட்டில் சேதனப் பசளை உற்பத்தி செய்வதாகவும் நாம் கூறினோம். நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதாகவும் நாம் கூறினோம். நான் காண்கிறேன் விசேட நிபுணர்கள் தொலைக்காட்சிக்கு வந்து உணவுப் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்கள்.
நஞ்சு கலந்த உணவை வழங்குவது அல்ல உணவு பாதுகாப்பு என்பது. நஞ்சற்ற உணவு வேளை ஒன்றை மக்களுக்கு வழங்குவதுதான் உணவு பாதுகாப்பாகும். நாம் வாக்குறுதியளித்தது மிகவும் கடினமானதொரு விடயத்தையாகும்.
அதுதான் நான் கூறியது மாற்றத்தை கேட்டீர்கள் என்று. புரட்சிகரமான மாற்றத்தையே கேட்டீர்கள். பழகிய முறைகளைத் தவிர்த்து, அம்மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினமாகும். விவசாயிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்த எனக்கு அவசியமில்லை. விவசாயிகளை பலவந்தமாக சேதனப் பசளையை பயன்படுத்துமாறு கூறுவதற்கும் எனக்கு அவசியமில்லை.
ஆனால் நான் சரியானதையே செய்தேன். வாக்குறுதியளித்ததையே செய்தேன். ஒரு சிலர் கூறுகின்றனர் நாங்கள் எதிர்பார்த்தது இராணுவ முறையை கொண்டு செல்லும் கோட்டாபய என்ற ஒருவரைத்தான் என்று. என்னால் முடியும்.
ஆனால், விவசாயிகளுக்கு சேதனப் பசளையைப் பயன்படுத்துமாறு கழுத்தைப் பிடித்து இராணுவ முறைப்படி கூறுவதற்கு. எனக்கு அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை அதனையா நீங்கள் எதிர்பார்த்தீர்கள், இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இல்லாமல் போகும் என்று ஒரு சிலர் கூறினார்கள்.
தற்போது அவர்களே கூறுகிறார்கள் ஐயோ, இவ்வாறான ஒருவரை நாம் எதிர்பார்க்கவில்லை என்று. இராணுவ வீரரை போன்ற ஒருவரையே நாம் எதிர்பார்த்தோம் என்று. வேண்டுமென்றால் என்னால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் இது ஒரு ஜனநாயக நாடாகும்.
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்றும் நாம் ஒரு நாடு என்ற வகையில் ஜெனிவாவுக்கு செல்கின்றோம் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று. அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை, நாம் எமது நாட்டுக்கு. ஆனால் நான் வாக்களித்த அந்த புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவேன்.
மீள்பிறப்பாக்க வலுசக்தியைப் பற்றி, நாம் கதைத்தோம். எம்மிடம் எண்ணெய் வளம் இல்லை. நிலக்கரி இல்லை. எரிவாயு இல்லை. ஆனால் எம்மிடம் சூரியசக்தி, நீர், காற்று என்பவை உள்ளன. எம்மால் இம்மூன்று சக்திகளில் இருந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதனையே நாம் “சுபீட்சத்தின் நோக்கு” என்று கூறுகிறோம். அதனை செய்யும் போது பாரிய எதிர்ப்புகள் எழுகின்றன.
நாம் ஒரு நாடு என்ற வகையில் வாக்களித்தது மிகவும் கடினமான விடயங்களையே ஆகும். அன்று நல்லாட்சியின் கீழ் ஜனாதிபதி, பிரதமர் பயணிக்கும் போது அதிக எண்ணிக்கையான வாகனங்கள் செல்வதை நாம் கண்டோம். வீதிகளை மூடினார்கள், அம்பியூலன்ஸ் வாகனங்கள் செல்கின்றன, தீயணைக்கும் வாகனங்கள் செல்கின்றன.
நான் அவற்றை நிறுத்தினேன். தற்போது நான் பயணிக்கும் போது என்னுடன் 02 பாதுகாப்பு வாகனங்கள் மாத்திரமே செல்கின்றன. நான் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். சாதாரணமான ஒரு ஹோட்டலிலேயே தங்கினேன். என்னுடைய மனைவி என்னுடன் சென்றார். அவரின் விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை நான் செலுத்தினேன். என்னுடன் 7 பேரே சென்றனர்.
ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் கூறினார்கள், கடந்த ஜனாதிபதி என்றால் பலரை இங்கே அழைத்து வந்தார்கள் என்று. உயர் தரத்திலான ஹோட்டலிலேயே தங்கினார் என்று, ஏன் நீங்கள் அவ்வாறு செய்யாமல் இங்கு இருக்கிறீர்கள் என்று, ஊடகவியலாளர்களும் வந்தார்கள். ஏன் நீங்கள் அவர்களை அழைத்து வரவில்லை என்று, நான் அவ்வாறு செய்யவில்லை.
அதுதான் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். என்னுடன் என்னுடைய உறவினர்கள் சென்றிருந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களை அழைத்துச் செல்லாவிட்டால், அவர்கள் கூறுகிறார்கள் எமது மாமா ஜனாதிபதியாக இருந்தாலும் எமக்கு எந்தவித பயனும் இல்லை.
எம்மால் செல்லவும் முடியவில்லை என்று. அதுதான் மாற்றம் என்பது, இணைப்பு அதிகாரிகளாக உறவினர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என்று நான் அமைச்சர்களுக்கு கூறினேன். அப்போது அமைச்சர்களிடம் கேட்கிறார்கள், எந்த பிரயோசனமும் இல்லை நாம் வேலை செய்து. எமக்கு இணைப்பு அதிகாரி என்ற பதவியும் இல்லை என்று, அதுதான் மாற்றம் என்பது. எனக்கும் ஒரு அரச மாளிகை இருக்கின்றது.
அது மிகவும் விசாலமானது. அதில் தங்குவதற்கு கஷ்டமாக உள்ளது. அநியாயமாக மின்சார கட்டணம் தான் அதிகரிக்கும். நான் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டிலேயே தற்போதும் இருக்கின்றேன். உண்மையாக பலபேர் வந்து கேட்கிறார்கள், இதிலேயா இருக்கின்றீர்கள் என்று, செல்லுங்கள் அந்த அரச மாளிகைக்கு என்று. அதுதான் மாற்றம். நான் அபயாராமயவின் சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வழங்கினேன்.
அவர்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வேலை செய்தார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் காலத்திலிருந்தே தேரர் அவர்கள் வேலை செய்தார்கள். அது உண்மை. ஆனால் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் எமக்கு எதிராக கதைத்தாலும் அவர்களிடம் விஜயதாச ராஜபக்ச, சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க போன்றோர் ஆலோசனை பெறச்சென்றார்கள்.
ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க போன்றோரும் ஆலோசனை பெறச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் ஆலோசனை பெறுவதற்கு சென்றது அத்தேரர் அவர்களிடமே. ஆனால் தேரரை வேந்தராக நியமித்தபோது அதற்கு அவர் தகுதி இல்லை என்று இப்போது கூறுகின்றார்கள்.
நான் ருவான்வெளி சேயவை வழிபடச் சென்ற போது தேரர் ஒருவர் கூறினார், ஜனாதிபதி அவர்களே “எங்கே நீங்கள் கூறிய ஒரே நாடு ஒரே சட்டம்” என்று. “நான் அதனைப் பெற்றுத் தருவேன் தேரர் அவர்களே என்று நான் கூறினேன்.
இரண்டு வருடங்கள் ஆயிற்று. நான் அமைச்சரவையிலும் கூறினேன், நாம் இதனை செய்ய வேண்டும் என்று. இது ஒரு கருத்தியல் ஆகும். ஆனால் ஞானசார தேரர் அவர்களை நியமித்ததை எதிர்த்து இன்று விமர்சிக்கிறார்கள்.
ஐந்து வருடங்களாக தேரர் அவர்களே “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தியலைப் பற்றி கதைத்தது. நான் அவரை அழைத்துக் கூறினேன். நீங்கள் ஐந்து வருடமாக இதுபற்றிக் கதைத்தீர்கள் தானே, நீங்கள் எனக்கு இக்கருத்தியலை வடிவமைத்து தாருங்கள் என்று. அதனை வடிவமைத்துத் தந்தால், நான் அதனை நீதி அமைச்சருக்கு கையளிப்பேன்.
குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு. அதுதான் எனக்கு அவசியமான விடயம். தற்போது அதற்கும் குற்றங்களை சுமத்துகின்றனர். இன்று பயருக்கு எவ்வளவு விலை கிடைக்கின்றது? நான் ஆட்சிக்கு வந்த உடனேயே வெளிநாட்டிலிருந்து பயறு, கௌபி, உளுந்து போன்ற 16 வகையான உணவுகளை இறக்குமதி செய்வதை நிறுத்தினேன்.
இன்று பயருக்கு விவசாயிகளுக்கு எவ்வளவு விலை கிடைக்கின்றது? 450 ரூபாய்கள் கிடைக்கின்றன். மிளகுக்கு எவ்வளவு விலை கிடைக்கின்றது? கருவாவுக்கு இரண்டு மடங்கை விட அதிகமாக கிடைக்கின்றது. ஒரு கிலோ 2800 – 3,200 ரூபாய்களுக்கிடையில் கிடைக்கின்றது.
நான் மஞ்சள் இறக்குமதியை முழுமையாக நிறுத்தினேன் நாம் தற்போது மஞ்சளில் தன்னிறைவு அடைந்துள்ளோம். மஞ்சள் விவசாயிகளுக்கு இன்று எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது. இஞ்சியின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது.
விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் போது நுகர்வோருக்கு பிரச்சினை ஏற்படுகின்றது, உண்மைதான். விவசாயிகளின் வருமானத்தை குறைக்க முடியாது. எமது கடமை விவசாயிகளை கவனிப்பது. அதனையே நாம் செய்திருக்குறோம்.
நாம் நுகர்வோருக்கு அதற்காக நிவாரணங்களை வழங்குவோம். அதுதான் பொறிமுறை ஆகும். இன்று எதிர்க்கட்சியினர் கதைக்கும் போது விவசாயிகளுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என்பது பற்றி கதைப்பதில்லை.
சந்தையில் உள்ள விலையைப் பற்றியே கதைக்கிறார்கள். 50 ரூபாவிற்கு நாட்டரிசி நெல்லை கொள்வனவு செய்தால் ஒரு கிலோ அரிசியை 96 அல்லது 98 ரூபாய்க்கு வழங்க முடியும். அனைத்து இலாபங்களுடன். ஆனால் அரிசியும் அதேபோன்று விலை அதிகரிக்கின்றது.
எமக்கு அவசியமில்லை விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை கட்டுப்படுத்துவதற்கு. அது விவசாயிகளின் கைகளுக்கு சென்றால். “சுபீட்சத்தின் நோக்கில்” முன்வைத்துள்ள அந்த புரட்சிகரமான மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம்.
நான் அதிகாரத்திற்கு வந்தபோது இளைஞர்கள் தாமாகவே முன்வந்து மதில்களில் சித்திரங்களை வரைந்தார்கள். கைவிடப்பட்டிருந்த வயல்களில் விவசாயத்தை ஆரம்பித்தார்கள்.
இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் முன்வாருங்கள் என்று. வயல் நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுங்கள் என்று. நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.