பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரதிவாதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வத்தளை, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பிரதேச செயலாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக முத்துராஜவெல சதுப்பு நிலப் பகுதிக்கு சொந்தமான 3000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அவர்களது வசிப்பிடமும் கடுமையாக சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக மனுதாரரான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வலுவிழக்கும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.