இந்து சமுத்திரத்தில் நிலவும் அணுவாயுதப் போட்டி காரணமாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கையின் பாதுகாப்பு, பாரிய ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்துக்குள் அடிக்கடி அணுவாயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரவேசிப்பது, அணுவாயுதப் போட்டி உச்சமடைந் திருப்பது, சில ஏகாதிபத்திய வாதிகள் குழுக்களாகப் பிரிந்து, சிறிய நாடுகளுக்குச் சார்பான தீர்மானங் களை எடுக்குமாறு அழுத்தம் கொடுப்பது ஆகிய காரணங்களால், இந்த நிலை தோன்றியுள்ளதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள காரணத்தால் இலங்கை இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில் கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் ஷீ ஷோங்ஹொங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாரதூரமான பலவீனத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஆயுதப் போட்டியை வேகப்படுத்தும், சர்வதேச அணுவாயுத பாவனையைக் குறைக்கும் முயற்சியைச் சீர்குலைக்கும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளில் இந்தக் கெடுதியான நடத்தை குறித்து சர்வதேச சமூகம் குறிப்பாகப் பிராந்திய நாடு கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது டன் திடமாக அதனை எதிர்க்க வேண்டும் எனவும் தூதுவரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதோடு உலகை அணுவாயுத பாவனையிலிருந்து விடுவிப்பதற்காக அணுவாயுதங்களைத் தடை செய்து, அவற்றை முற்றாக அழிக்க வேண்டும் எனவும் சீன நம்புகிறது. மேலும் சீனா எப்போதும் தனது அணுவாயுத பலத்தை தேசியப் பாதுகாப்புக்குத் தேவையான மட்டத்தில் வைத்திருந்தது எனவும் சீன தூதுவரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது