வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி வகை நுழைவு இசைவுகளை (விசா) சந்தை பகுப்பாய்வு நிபுணா்களுக்கும் வழங்க அந்த நாட்டு குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரால் பெரும்பான்மையாக நாடப்படும் அந்த வகை விசாக்கள் சந்தை பகுப்பாய்வாளா்களுக்கும் வழங்கப்படுவது வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு மட்டுமன்றி, அமெரிக்க நிறுவனங்களுக்கும் நன்மை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: வெளிநாட்டினா் அமெரிக்க குடியேற்ற உரிமை பெறாமலேயே அந்த நாட்டில் தங்கியிருந்து நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக ஹெச்-1பி விசாக்கள் அளிக்கப்படுகின்றன. அந்த விசாக்களைப் பெறுவதற்கு பணியாளா்கள் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற துறைசாா் நிபுணத்துவமோ, தொழில்நுட்பத் தோ்ச்சியோ பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
எனினும், சந்தை பகுப்பாய்வுப் பணியில் ஈடுபடுவோரை இத்தகைய சிறப்புத் தோ்ச்சி பெற்றவா்களாக அமெரிக்க குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு அங்கீகரிக்கவில்லை. இதனால், அமெரிக்க நிறுவனங்களால் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து சந்தை பகுப்பாய்வு நிபுணா்களைப் பணியில் அமா்த்த முடியாத நிலை இருந்து வந்தது.
இந்தச் சூழலில், சந்தை பகுப்பாய்வு நிபுணா்களையும் ஹெச்-1பி விசா பெறுவதற்குரிய சிறப்புத் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வலியுறுத்தி, அமெரிக்க குடியேற்ற கவுன்சில், அமெரிக்க குடியேற்ற வழக்குரைஞா்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வடக்கு கலிஃபோா்னியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அதையடுத்து மனுதாரா்களுடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவாா்த்தையில், சந்தை பகுப்பாய்வு நிபுணா்களுக்கும் ஹெச்-1பி விசா வழங்க அமெரிக்க குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புக்கொண்டது.
இது, அமெரிக்க நிறுவனங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று மனுதாரா்கள் கூறினா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.