கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்களிடத்தில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் (G. L. Peiris) நம்பிக்கை அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தைக்கான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு முதன்முறையாக கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டபோதும் இறுதி நேரத்தில் அந்தப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியால் இரத்துச் செய்யப்பட்டது.
இதன்பின்னர், பஷில் ராஜபக்ஷவின் (Basil Rajapaksa) பதவியேற்பு நிறைவடைந்ததன் பின்னர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தபோதும், அதற்கான செயல் ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், தற்போது கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இராஜதந்திரத் தரப்புக்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது கூட அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்து நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பந்தனுடனான சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சம்பந்தனிடத்தில் “அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக?” என்ற கேள்வியை தொடுத்துள்ளார். எனினும், அவ்விதமான அழைப்புக்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டமைப்புடனான சந்திப்பு எப்போது இடம்பெறும், அதன் நிகழ்ச்சி நிரல் என்ன என்பன தற்போது வரையில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த விடயங்கள் அனைத்தும் ஐ.நா.காலநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைக்கு பின்னிற்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக அதன் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய செயலாளர் எலிசபெத் ட்ரஸ்ஸை அந்நாட்டு வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்தபோது “புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊக்குவித்துள்ளதாகவும், அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கம் அணுகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.