ஒட்டமாவடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து மனைவியின் தந்தை மற்றும் தாயை நபரொருவர் கோடரியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (30) ஒட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மனைவியை விட்டு பிரிந்திருந்த கணவர் ஒருவர், வீடு புகுந்து மனைவியின் தந்தை மற்றும் தாயை கோடரியால் கொடூரமாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மருமகனின் தாக்குதலுக்குள்ளான 62 வயதுடைய மாமனார், ஆபத்தான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் தாயும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவத்தை மேற்கொண்ட நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.