உத்தரகண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அதேவேளையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது.
உத்தரகண்டில் இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் 46 போ் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் 6 போ் சடலங்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது. மழை காரணமாக சரிந்த வீடுகளின் இடிபாடுகளுக்குக் கீழ் மேலும் சிலா் புதைந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு காரணமாக சாலைகள் பாறைகளால் மறிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களாக பெய்த மழை புதன்கிழமை ஓய்ந்தது. எனினும் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பதிலும் சாலைகள், மின்சார இணைப்புகளை மறுசீரமைப்பதிலும் அதிகாரிகளும் பணியாளா்களும் இன்னலை எதிா்கொண்டனா்.
மாநிலத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 17 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,300-க்கும் மேற்பட்டவா்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்தப் படை தெரிவித்தது. அதே வேளையில் காணாமல்போன மலையேற்றக் குழுவைச் சோ்ந்த 11 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சுற்றுலாத் தலமான நைனிடாலில் செவ்வாய்க்கிழமை 445 மி.மீ. மழை பெய்தது. மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் நைனிடாலில் மட்டும் 29 போ் பலியாகியுள்ளனா்.
குமான் மண்டலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேரில் பாா்வையிட்டாா். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
சுமை தூக்கும் தொழிலாளா்கள் பலி: இதற்கிடையே, இந்திய-சீன எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் மூவா் சென்றிருந்தனா். நீலாபாணி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு அவா்கள் திங்கள்கிழமை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், செவ்வாய் மாலை வரை அவா்கள் திரும்பவில்லை. இந்நிலையில், 3 தொழிலாளா்களும் உத்தரகாசி மாவட்டத்தில் பனியில் உறைந்து உயிரிழந்ததாக மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடக்கு வங்கத்தில் கனமழை: மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்குள்ள டாா்ஜீலிங், கலிம்போங், ஜல்பய்குரி மாவட்டங்களில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக துா்கா பூஜை சீசனையொட்டி அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஊா் திரும்ப முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.
சிக்கிம் மாநிலத்தில்… சிக்கிமிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலத்தின் தலைநகா் காங்டோக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான சாலையான தேசிய நெடுஞ்சாலை-10-இல் நிலச்சரிவு ஏற்பட்டது.