யாழ்ப்பானம் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் நீண்டகாலமாக பொலிசாரிடம் சிக்காமல் நூதனமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன் வீட்டு மதிலுக்கு வெளியில் நின்று பாத்திரத்தை கொடுப்பவர்களிற்கு கசிப்பை விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
நெல்லியடி பொலிசார் சில முறை அப்பெண்ணை கைது செய்ய முயற்சி செய்த போதும் அவர் தப்பித்து வந்ததுடன், குறித்த பெண்மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று அவர் கசிப்பு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசாரை கண்டதும் போத்தலில் இருந்த கசிப்பை சமையலறை நீர்தொட்டிக்குள் அவர் ஊற்ற முயன்ற நிலையில் , துரிதமாக செயற்பட்ட பொலிசார் கசிப்பை போத்தலை மீட்டனர்.
அதோடு அப் பெண்ணை பொலிசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, அவர் ஏற மறுத்து பெரும் இழுபறி நிலை ஏற்பட்டதுடன் , பெண்ணின் உறவினர்களும் பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
எனினும், பெண் பொலிசார் அவரை அள்ளிச்சென்று வாகனத்தில் ஏற்றியதையடுத்து, கைதானவரின் மகள் அயலிலுள்ள இளம் யுவதியொருவரின் வீட்டுக்கு சென்று, தம்மை காட்டிக் கொடுத்ததாக கூறி, அவரது கழுத்தை நெரித்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,சம்பவம் தொடர்பில் 48 வயதான தாயும், 25 வயதான மகளுமே கைதான நிலையில், சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.