உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடப்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீரியங்கள்ளி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நேற்று (10) இரவு சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் மது அருந்திவிட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அங்கிருந்த உறவினர்கள் இருவரை கடுமையாக தாக்கியுள்ளதுடன், கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அங்கு நின்றவர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்தி இதுபற்றி தகவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலுக்கு அமைய உடப்பு பொலிஸ் நிலையத்தின் இரவு நேரக் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அங்கு மதுபோதையில் இருந்த சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதம் ஒன்னிறால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயத்துக்குள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மது அருந்திவிட்டு கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரை கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் பொலிஸ் தடயவியல் பிரிவினரும், உடப்பு பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.