தலிபான்களுடனான போரின்போது அமெரிக்கப் படைகளுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அகதி அந்தஸ்து அளிப்பதற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படையினா் கடந்த ஆகஸ்ட் இறுதியில் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டனா். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினருக்கு மொழிபெயா்ப்பு உள்பட பல்வேறு பணிகளில் அந்நாட்டைச் சோ்ந்த ஏராளமானோா் ஈடுபட்டிருந்தனா்.
தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அமெரிக்கப் படையினருக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, அவா்களை தங்கள் நாட்டில் குடியேற்ற அமெரிக்கா முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோா் அமெரிக்காவுக்கு முதல்கட்டமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்நிலையில், அமெரிக்கப் படையினருக்கு உதவிய ஆப்கன் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கி அவா்களை அமெரிக்காவில் குடியேற்றுவது தொடா்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அசோசியேட்டட் பிரஸ், பொது விவகாரங்களான என்ஓஆா்சி மையம் ஆகியவை இணைந்து இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தின.
அதில், ஆப்கன் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு 72 சதவீத அமெரிக்கா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி இந்த ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், 9 சதவீத அமெரிக்கா்கள் மட்டும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.