கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றுடன் நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும் என கூறப்படுகின்றது.
மேலும், மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, மேற்கு துறைமுக முனையம் ஆயிரத்து 400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதாக இருக்கும் என்பதுடன் பெரிய கொள்கலன்களை கையாள இது ஒரு பிரதான தளமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக இந்தியத் துறைமுக நிறுவனம் ஒன்று கூட்டு முயற்சியில் 51 வீதமான பங்கைக் கொண்டிருக்கும் திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.