அமெரிக்காவில் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட இளம்பெண், பேஸ்புக் உதவியுடன் தனது தாயாருடன் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சலிகா வென்செஸ் சால்கடோ (Angelica Vences-Salgado).
இவருக்கும், இவரது கணவர் பாப்லோ ஹெர்னான்டஸுக்கும் (Pablo Hernandez) இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தம்பதிகளுக்கு இடையே தகராறு முற்றவே, தமது மகளான ஜாக்குலினை (Jacqueline Hernandez) தந்தை ஹெர்னான்டஸ் கடத்திச் சென்றுவிட்டார். அப்போது அவருக்கு வயது 5.
இதுதொடர்பாக ஏஞ்சலிகா பொலிஸில் புகார் அளித்தார். பல இடங்களில் தேடியும் சிறுமி ஜாக்குலினை கண்டுபிடிக்க முடியவில்லை.
காலங்கள் கடந்த நிலையில், தற்போது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் 19 வயது இளம்பெண்ணாக மாறினார் ஜாக்குலின். தனது தந்தையுடன் டெக்சாஸில் அவர் வசித்து வந்தார்.
தனது தாயாரை பார்க்க வேண்டும் என ஜாக்குலின் பல முறை வலியுறுத்தியும் அவரது தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவர் குறித்த எந்த தகவலை கூறவும் அவரது தந்தை மறுத்துவிட்டார். ஜாக்குலினுக்கு தெரிந்தது எல்லாம் அவரது தாயாரின் பெயர் மட்டுமே.
இந்நிலையில், கடந்த மாதம் பேஸ்புக்கில் தனது தாயாரின் பெயரான ஏஞ்சலினா வென்சஸ் என்பதை பதிவிட்டு ஜாக்குலின் தேடிய போது, பலரின் முகங்கள் வந்திருக்கின்றன.
அப்போது தனது முகச்சாயலை ஒத்திருந்த மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு ஜாக்குலின் பேசியிருக்கிறார். அப்போது, தான் 5 வயதில் தனது தந்தையால் பலவந்தமாக எடுத்து வரப்பட்டதை அவர் கூறியிருக்கிறார்.
இதனை அவர் கூறியதும், எதிர்முனையில் இருந்த பெண், ஜாக்குலின் தான் தனது மகள் என்பதை உறுதி செய்துவிட்டார். இருந்தபோதிலும், புளோரிடா பொலிஸாரை தொடர்பு கொண்ட ஏஞ்சலினா, ஜாக்குலின் தொடர்பாக விசாரித்துள்ளார்.
அவர்களும் ரகசிய விசாரணை மேற்கொண்டு, ஜாக்குலின் தான் ஏஞ்சலினாவின் மகள் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டெக்சாஸுக்கு வந்த தனது தாயாரை கட்டியணைத்து வரவேற்றார் ஜாக்குலின்.
இதுதொடர்பான செய்திகள் அமெரிக்க ஊடகங்களிலும் வெளியாகின. 14 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் உதவியுடன் தாயுடன் மகள் இணைந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.