கொரோனா வைரஸிலிருந்து சுகாதார தரப்பினரை பாதுகாக்க வேண்டும் என்கிற உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், சுகாதார தரப்பைச் சேர்ந்த பலரை காப்பாற்றியிருக்க முடியும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியாலைக்கு இன்று (11) சுகாதார உபகரணங்களை வழங்கி வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக வல்லரசு நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸின் முதல் அலையை இலங்கை வெற்றிக்கொண்டிருந்தது என்றே கூற வேண்டும். எனினும் அதன் பின்னரான இரண்டாவது அலையில் சிறிய பாதிப்பும் ஏற்பட்டிருந்தாலும் மூன்றாவது அலையில் மிக பெரும் பாதிப்பாக உருவாகியுள்ளது. இதனால் அதிகளவான உயிர் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சுகாதாரத் தரப்பினர் பல ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்துக்கான இலங்கை பிரதிநிதிகள் பல பரிந்துரைகளையும் வழங்கியிருந்தார்கள். இதனை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே கொரோனா வைரஸிடமிருந்து நாட்டு மக்களை காப்பாற்றலாமெனவும் எச்சரித்திருந்தார்கள்.
நாட்டை முடக்குதல், போக்குவரத்து தடைகளை ஏற்படுத்துதல், மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கூறியிருந்தார்கள். குறிப்பாக சுகாதார தரப்பினரைப் பாதுகாக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தார்கள். சுகாதாரத் தரப்பினரே நாட்டு மக்களை பாதுகாக்கக்கூடியவர்கள். சுகாதாரத் தரப்பினரைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பரிந்துரையை நடைமுறைப்படுத்தியிருந்தால் அவர்களை இன்று எம்மால் பாதுகாத்திருக்க முடியும்.
மூன்றாவது அலையில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 4,500 இக்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது. நாட்டை முடக்குவதற்கு முன்னர் சுமார் 4 ஆயிரம் தொற்றாளர்களும், முடக்கப்பட்டதன் பின்னர் சுமார் 3 ஆயிரம் தொற்றாளர்களும் நாட்டின் இனங்காணப்படுகிறார்கள்.
மூவாயிரம் தொற்றாளர்களில் 180 மரணங்கள் பதிவாகின்றன. இது 6 சதவீதமான மரணங்கள். ஏனைய நாடுகளில் 2 அல்லது 3 சதவீத மரணங்களே பதிவாகியுள்ளன. இது பாரதூரமான விடயம். பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகின்றன.
கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி செலுத்துவதே ஒரு வழி. இந்த விடயத்தில் அரசாங்கம் மாத்திரமல்லாது பொதுமக்களும் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும். “ என்றார்.