இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளதாக உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.
உலக வங்கி குழுமம் வௌியிட்டுள்ள தனது அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் பரந்த பொருளாதார மீட்சியுடன் ஒப்பிடுகையில் குடும்ப வருமானங்கள் மற்றும் தொழிலாளர் சந்தை முடிவுகள் இன்னும் பின்தங்கியே காணப்படுவதால், இந்த பொருளாதார மீட்சியானது முழுமையற்றதாகவும், சீரற்றதாகவும் உள்ளதாக அந்த அறிக்கையில் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில்துறையின் வலுவான செயல்திறன் மற்றும் சேவைத்துறையின் சீரான வளர்ச்சி காரணமாக, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இந்த ஆண்டில் 4.4 சதவீதத்தால் வளர்ச்சியடையும் எதிர்பார்க்கப்படுகின்றது
பேரண்ட பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடியின் போது இழந்த வாழ்க்கைத்தரத்தை பல குடும்பங்கள் இன்னும் மீளப் பெறவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வறுமை விகிதம் சுமார் 14 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், அது நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தை விட உயர்வாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை பணவீக்கம் 2026 ஆம் ஆண்டில் 5.7 சதவீதமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்மட்டத்தில் காணப்படும் என்றும், பின்னர் 2028 ஆம் ஆண்டளவில் 5.0 சதவீத பணவீக்க இலக்கை நோக்கிப் படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில், உயர் எரிசக்தி விலைகள் மற்றும் பலவீனமான ரூபாயின் தாக்கம் பொருளாதாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

