பொதுவாக 2,800 மெகாவொட் அளவிலான மின்சாரத் தேவையே உள்ளது. எனினும், இரவு வேளையில் நமக்கு 3,100 மெகாவொட் வரையான கேள்வி காணப்படுகிறது. எல் நினோ நிலைமையுடன் சேர்த்து, ஒருவேளை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அந்தத் தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பகல் வேளைகளில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக சூரிய மின்சக்தியை சேமித்து வைக்கும் வசதி இதுவரை இல்லாதிருந்தமையே நமக்கு நிலவிய பிரச்சினையாகும். அந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக நாம் தற்போது 160 மெகாவொட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் 130 மெகாவொட் தொடர்பான பொறுப்பை WINDFORCE நிறுவனம் ஏற்றுச் செயல்படுகிறது.
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் இந்த 160 மெகாவொட்டையும் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம். அதேபோன்று, மேலும் 400 மெகாவொட், 250 மெகாவொட் மற்றும் 150 மெகாவொட் என மின்கல சேமிப்புக்கான இதே வகையிலான விலைமனுக் கோரல் நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
அவற்றில் சில மதிப்பீட்டு மட்டத்தில் உள்ளன. 2027 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர், பெரும்பாலும் முதல் 6 மாதங்களுக்குள், அந்தத் திட்டங்களையும் நமது மின் கட்டமைப்பில் சேர்க்க முடியும் என நாம் நம்புகிறோம்.
இதன் மூலம் ஒருபுறம் அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க முடிவதுடன், மறுபுறம் இரவு வேளையில் அதிகளவில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படும் அதிக செலவைக் குறைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்பாக அமைகின்றது.
அதிகளவில் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பயன்படுத்தி தூய்மையான மின் உற்பத்தியை மேற்கொள்வதுடன், குறைந்த உற்பத்திச் செலவில் நியாயமான விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கும், திறமையான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குமான நமது அரசாங்கத்தின் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது.
அதற்கமைய, இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக்குவதற்கு பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் தெரிவித்தார்

