நாடு என்ற ரீதியில் நாம் பாலதூரமான சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறோம். கடந்த ஏழு ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் ஈரான் போர் வரையிலான ஐந்து துயரச் சம்பவங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். பல்வேறு சுற்றாடல் ஆர்வலர்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி ஆறாவது சவாலுக்கும் முகங்கொடுக்க நேரிடும்.
ஆகையினால் நானும் பேராசிரியர் எல்.எம். அபிவிக்ரமவும் இணைத் தலைமை தாங்கும் இலங்கை காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கூட இது குறித்து ஆராய்ந்து வருகின்றது. எல் நினோ – லா நினோ நிலைமை இம்முறை தீவிரமாகப் பல தாக்கங்களைச் செலுத்தி வருகின்றது. இதனால் பிரான்ஸ், கிரீஸ் போன்ற நாடுகளில் காட்டுத் தீ பரவும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தல்பே பத்துவ உள்ளிட்ட மாத்தறை – ஹம்பாந்தோட்டை இரு பகுதிகளுக்குமான உப பிரதான சங்கநாயக்கர் பதவிக்கு நியமிக்கப்பட்ட சங்கைக்குரிய சப்புகஸ்தியாயே தர்மபால தேரருக்கு சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த எல் நினோ – லா நினோ நிலைமை காரணமாக கடுமையான காலநிலையால் கடும் வறட்சியும், பின்னர் கடும் மழையும் ஏற்படும். இத்தகைய காலநிலை மாற்ற நிலைமைகளுக்குள் குறுகிய காலத்திற்குள் இரு எதிர்முனைகள் தொழிற்படுகின்றன. இவை நடந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் ஒரு நாடாக இவற்றுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கொண்டிருக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அனர்த்தங்களுக்குப் பதிலளிக்கும் செயற்பாட்டுக்கு மேலதிகமாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதை விடுத்து புதிய அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பே நாட்டிற்குத் தேவையாக காணப்படுகின்றன. இதற்காக புதிய செயற்பாடுகளும் புதிய நிறுவனங்கள் கூடத் தேவைப்படுகின்றன. அடிக்கடி ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
40,000 க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்த சுனாமிப் பேரிடர் 2004 ஆம் ஆண்டில் எமக்குத் தாக்கம் செலுத்திய பின்னரும் கூட, எமது நாட்டில் நவீன அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டுக்குச் செல்ல முடியாமல் போயுள்ளன. இந்த அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டை அரச, அரசசார்பற்ற, சிவில் தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சாதி, மதம், குலம், வர்க்க, கட்சிப் பேதமின்றி சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அதற்கமைய ஏனைய மதங்கள், இனங்கள் உள்ளிட்ட அனைத்துக் குழுக்களினதும் பாதுகாப்பு குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். சம்புத்த சாசனத்தைப் போஷிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளதுடன் அது அரசாங்கத்தின் பொறுப்புமாகும். அதற்கமைய ஏனைய மதங்களையும் இனங்களையும் பாதுகாத்து அவற்றின் தனித்துவத்தைப் பேணுகின்ற செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும். இதனை நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
வங்குரோத்தான நமது நாட்டிற்கு வெளிநாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுப்பதற்கு பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிறுவனங்கள் கூட இதற்கான முயற்சிகளை எடுத்துள்என. நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இவற்றுக்கு முகம் முகங்கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

