யாழ் நகரின் – பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் இரகசியமாக நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை தவறான முறைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
விசாரணைகளின்போது, முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள வேறு வீடுகளின் வளாகங்களுக்குள் நுழைந்துள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

