கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிடப்பட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (4) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட சேதம்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் விசேட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒருசில சிறைச்சாலைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதா என்ற சந்தேகமும் காணப்படுகிறது“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் சிறைச்சாலைக்கு 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

