நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
டீ அனாவ் நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இரவுநேரம் ஏற்பட்ட நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு(NEMA) உள்ளூர் நேரப்படி இரவு 9.14 மணிக்கு (0914 GMT) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை,ஆரம்பத்தில் 6.3 ரிக்டர் அளவில் மதிப்பிட்டது, பின்னர் அதை 5.9 ஆகக் குறைத்தது.
சுனாமி எச்சரிக்கை இரத்து
தற்போது சுனாமி எச்சரிக்கை இரத்து செய்யப்பட்ட போதிலும், கடலோரப் பகுதிகளில் “வலுவான மற்றும் அசாதாரணமான நீரோட்டங்கள் மற்றும் கரையோரத்தில் கணிக்க முடியாத கடல் அலைகள்” ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக NEMA கூறியது.
மக்கள் தண்ணீரை விட்டும், கடற்கரைகளில் இருந்தும் வெளியேற வேண்டும் என்றும், துறைமுகங்கள், படகுத் தளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அது தெரிவித்தது.

