விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் சுற்று-16 (Round of 16) ஆட்டத்தில், மெக்சிகோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூட் பெலிங்ஹாம் (Jude Bellingham) ஆட்டத்தின் 36 மற்றும் 38-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு அபாரமான கோல்களை அடித்து அணிக்கு பலத்த முன்னிலையைத் தந்தார்.
தொடர்ந்து, 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணித்தலைவர் ஹாரி கேன் (Harry Kane) ஒரு கோல் அடித்தார்.
மறுபுறம், மெக்சிகோ அணியின் ஜூலியன் குவினோன்ஸ் (Julián Quiñones) 42-வது நிமிடத்திலும், ரவுல் ஜிமெனெஸ் (Raúl Jiménez) 69-வது நிமிடத்தில் பெனால்டி மூலமும் கோல் அடித்து இங்கிலாந்திற்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர்.
ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சா (Jarell Quansah) சிவப்பு அட்டை (Red Card) காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால், இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பந்து தன்வசம் வைத்திருப்பதிலும் (66%), கோல் போஸ்ட்டை நோக்கி பந்தை அடிப்பதிலும் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், இங்கிலாந்தின் வலுவான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் சமன் செய்ய முடியாமல் போனது.
இறுதியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அடுத்ததாக நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் நோர்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது. இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நோர்வே அணி 2-1 என்ற கணக்கில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தி அதிர்ச்சிளித்தது குறிப்பிடத்தக்கது.

