ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் எந்தவொரு அமைதி உடன்பாட்டையும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் அங்கு இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இங்கு அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பது நான்தான், நெதன்யாகு அல்ல. எனவே, இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை” என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்படவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
ட்ரம்ப் அதிருப்தி
இந்தத் தாக்குதல்களால் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது இத்தகைய மோதல்கள் கடந்த 47 ஆண்டுகளாக அல்லாமல் 3,000 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் ஒரு விடயம்தான் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுடன் ஒரு முக்கிய அமைதி ஒப்பந்தத்தை நோக்கி அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
நெதன்யாகுவின் இந்த நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தன் பின்னணியில், தற்போது இஸ்ரேலிய பிரதமரை குறித்த இத்தகைய கடுமையான கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

