பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாகப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி மின்னஞ்சல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபரின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலையமைப்பு தற்போது செயல்பட்டு வருகின்றது.
இணைப்புக்களை திறக்காதீர்..
இந்த நிலையில், இது குறித்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை பொலிஸின் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பெயரையும், பொலிஸ்மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையொப்பத்தையும் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மிரட்டல் மற்றும் பணம் கேட்கும் மின்னஞ்சல் வலையமைப்பு குறித்து இதன் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த செயல்பாடுகள் மூலம் இலங்கை பொலிஸின் நற்பெயருக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனக் கவனிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான, அச்சுறுத்தும் அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தொடர்பாக தேவையற்ற பதற்றத்திற்கு பொதுமக்கள் ஆளாக வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அந்த செய்திகளுக்குப் பதிலளிப்பதில் இருந்தும் அல்லது அவர்கள் கோரும் பணத்தை செலுத்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புக்களை திறக்காமல் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இலங்கை பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரவிற்கோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை பொலிஸார் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

