சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் அதிகளவிலான பாதிப்புக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுவிட்சர்லாந்துக்கான பொதுச் சுகாதார அலுவலகம் (BAG) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியின் வாராந்த அறிக்கையின்படி 5,243 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன, இது கடந்த வாரத்துடன் ஒப்பீடும் போது 5.8 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றின் திரிபு காரணமாக இம்முறை 20 முதல் 29 வயதுடையவர்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 70 முதல் 79 வயதுடையவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதற்கு கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 லிருந்து 91 ஆக உயர்ந்ததுள்ளது மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு, ஜூலை தொடக்கத்தில் இருந்து மீண்டும் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை காட்டுகின்றது.
சுகாதார அலுவலக அறிக்கையின் படி வாரத்தில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சராசரியாக 39 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர், இது முந்தைய வாரத்துடன் ஒப்பீடும் போது 22 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இறப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாகவும் வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.