இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலப்பகுதியில் 2800 கோடி ரூபா பெறுமதியான மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அக் காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மிளகாயின் அளவு 18,556 மெட்ரிக் தொன்கள் எனவும் கூறப்படுகின்றது.
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் தேவையில் 80 சதவீத மிளகாயை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் மிளகாய்த் தேவையில் 20 வீதத்தை வழங்க தயாராக உள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாய துறை நவீனமயமாக்கல்
விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் யகல்ல, கடகல, தம்புத்தேகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் தோட்டங்களை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவதானித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
அத்துடன் , ஒரு ஏக்கர் மிளகாய் பயிரிட்டு 6 மாத காலத்திற்குள் 74 இலட்சம் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
நாட்டில் மிகவும் வெற்றிகரமாக மிளகாய் பயிரிடும் திறன் காணப்பட்ட போதிலும், நாட்டின் தேவையில் 60 வீதத்திற்கும் அதிகமான மிளகாய் இன்னும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.