அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ண போட்டியின் ஆட்டங்கள் 7 நகரங்களில் நடைபெறவுள்ளன.
டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அந்தப் போட்டியின் 45 பிரதான ஆட்டங்கள் யாவும் மெல்போா்ன், சிட்னி, பிரிஸ்பேன், பொ்த், அடிலெய்டு நகரங்களில் நடைபெறவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் கீலாங் மற்றும் ஹோபாா்ட் நகரங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. இறுதி ஆட்டமானது மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தில் நவம்பா் 13 இல் நடைபெறவுள்ளது. அரையிறுதி ஆட்டங்கள் இரண்டும் சிட்னி மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளன.
அந்த உலகக் கிண்ண போட்டிக்கு, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, ரன்னா் அப்-ஆக வந்த நியூஸிலாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. அவற்றோடு இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பா் 12 சுற்றில் இடம் பிடித்துவிட்டன.
நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, இருமுறை சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதல் சுற்றில் விளையாடவுள்ளன. எஞ்சிய 4 இடங்களுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஓமனில் அடுத்த ஆண்டு பிப்ரவரியிலும், ஜிம்பாப்வேயில் ஜூன்/ஜூலையிலும் நடைபெறவுள்ளது.