69 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ இன்று, அதனை உருவாக்கிய டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக செலுத்தவும், எஞ்சிய ரூ.15,300 கோடிக்கு ஏா் இந்தியாவின் கடனை ஏற்கவும் டாடா ஒப்புக்கொண்டது.
சுமார் 70 ஆயிரம் கோடி இழப்பில் ஏர் இந்தியா நிறுவனம் இயங்கி வந்ததால் விமானங்களைப் பராமரிப்பதிலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அதனை தனியாருக்கு விற்பனை செய்யும் வகையில் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் பல்வேறு பெருநிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், டாடா நிறுவனம் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஏர் இந்தியாவை டாடா கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியப்போதும், ஒரு சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் 69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமானது.
இதேவேளை ஏா் இந்தியா நிறுவனத்தை கடந்த 1932ஆம் ஆண்டு ஜேஆா்டி டாடா தொடங்கினாா். அப்போது அந்த நிறுவனம் டாடா ஏா்லைன்ஸ் பெயரில் செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு 1946ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஏா் இந்தியாவாக பெயா் மாற்றம் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.