இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் அல்லது 10 குடும்பங்களில் 03 குடும்பங்கள் தங்களது அடுத்த உணவைப் பற்றி நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் கூறுகிறது.
உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, உணவுப் பண வீக்கம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை அந்த நிலைக்கு வழிவகுக்கும். இந்நாட்டில் சுமார் 61 வீதமான மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அதற்கேற்ப சத்தான உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் தற்போது கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 02 இலட்சமாக உள்ளனர்.
எதிர்காலத்தில் ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது.
அதோடு தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதைத் தவிர்ப்பதால், அவர்களின் உடல் நலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.