Vijay (விஜய்) சூர்யாவை விஜய் பின்னுக்கு தள்ளியதை விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.
கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய். சுமார் படத்திலிருந்து மெகா ப்ளாக் பஸ்டர் படம்வரை ரசிகர்களுக்கு அவர் கொடுத்திருக்கிறார். அவரை நம்பி பணம் போட்டால் லாபம் வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக நஷ்டம் இல்லை என்ற மனப்பான்மையால் கோடி கோடியாக பணத்தை கொட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் இந்தியாவில் அதிக வியாபாரமுடைய நடிகர்களில் ஒருவர் விஜய்.
விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். மாஸ்டர் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுவருகிறது. படமானது அக்டோபர் மாதம் வெளியாகிறது.
சமூக வலைதள கணக்கு இல்லாமல் சாமானியரிலிருந்து பிரபலம்வரை யாருமே கிடையாது. அதன் மூலம் ரசிகர்களை எளிதாக சேரலாம் என்பதால் பிரபலங்களும் சமூக வலைதள கணக்கு தொடங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர். ஆர்வத்தோடு மட்டுமின்றி கணக்கு தொடங்கி அதில் ஆக்டிவ்வாகவும் இருக்கின்றனர். அந்தவகையில் ஏற்கனவே ட்விட்டரில் இருக்கும் விஜய் இப்போது இன்ஸ்டாகிராம் கணக்கையும் தொடங்கியிருக்கிறது.
மில்லியன் ஃபாலோயர்ஸ்: விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்தது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. இதனையடுத்து அவரை பலரும் ஃபாலோ செய்தனர். குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷ்தான் பிரபலங்களில் அவரை ஃபாலோ செய்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் விஜய்யை ஃபாலோ செய்தனர், இதனால் அவருக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை எக்கச்சக்கமாக ஏறியது.
சூர்யாவை முந்திய விஜய்: இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் சூர்யாவை நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.சூர்யாவுக்கு இதுவரை இன்ஸ்டாகிராமில் 6.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருந்தனர். தற்போது விஜய் அவரை முந்தியிருக்கிறார். அதாவது விஜய்க்கு 6.7 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். இதனையடுத்து ரோலக்ஸை லியோ அசால்ட்டாக முந்திவிட்டார் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
சூர்யா 42: சூர்யாவும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கான பெயர் ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. ஞானவேல் ராஜா தயாரிக்கும் அப்படம் 10 மொழிகளில் 3டியில் வெளியாகிறது. சூர்யாவின் கேரியரில் இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. திஷா பதானி ஹீரோயினாக நடிக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.