இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன
ஒரே தூக்குமேடை
இலங்கையில் தற்போது கட்டமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய ஒரே தூக்குமேடை வெலிக்கடை சிறைச்சாலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி போகம்பர சிறைச்சாலையில் இருந்த மற்றொரு தூக்கு மேடை தற்போது அந்தச் சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லை.
சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலின்படி தற்போது நாட்டில் 806 கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
மீண்டும் மரண தண்டனை
இவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 58 பேர் அடங்குகின்றனர்.
அவர்களில் 52 ஆண்களும் 6 பெண்களும் உள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டவரும் மரண தண்டனை கைதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்பாட்டு சபை கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

