5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த ஜூலை 27ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டையில் அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இக்கொடூர சம்பவத்தினையடுத்து பெண்ணின் சகோதரரான சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அத்துடன் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.
இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தையும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
முன்னதாக, நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனை முன்பு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

