10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நீர் கட்டணத்தை செலுத்த தவறியதாக கூறப்படும் 48 முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வழக்கை தாக்கல் செய்யுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சபையின் சட்டப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, சட்டப் பிரிவு வழக்குப்பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
அதேவேளை நிலுவைத் தொகையை வசூலிக்க முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களுக்கு சட்டப் பிரிவு முன்னதாக இறுதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இறுதி அறிவிப்புகளை அனுப்பிய நிலையில், ஐந்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது கட்டுப்பணத்தை அண்மையில் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொது மக்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிடுவதற்கு முன்னர், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு வாசுதேவ நாணயக்கார மேலும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்