நான்கு நிறுவனத் தலைவர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி நேற்று (05) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, குவைட் இராஜ்ஜியத்துக்கான புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியத்தை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் புதிய தலைவராக உபுல் தர்மதாஸவின் நியமனத்துக்கும், தேசிய காகிதக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கே.ஏ. விமல் ரூபசிங்கவின் நியமனத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக, பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக எம்.டி. மஹிந்த சாலிய மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கொமடோர் (பொறியியலாளர்) எச்.எஸ். பாலசூரியவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, ரிஷாட் பதியுதீன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.