இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது.
அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த சராசரியான ஐ.அ.டொலர் 837 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி வருவாய்கள் 2021 ஓகஸ்ட் இறுதியிலுள்ளவாறாக எட்டு மாத காலப்பகுதியின் சராசரியாக ஐ.அ.டொலர் 985 மில்லியனைக் கொண்டுள்ள வேளையில், சராசரி வருவாய்கள் 2021 ஜூன் – ஓகஸ்ட் காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,064 மில்லியன் பெறுமதியாக பதிவுசெய்யப்பட்டது.
இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பாரிய வெளிநாட்டுச் செலாவணி ஈட்டுநராக வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை (வெவ்வேறான உற்பத்திகள் உள்ளடங்கலாக) காணப்படுவதால் இவ் அபிவிருத்தி பாராட்டத்தக்கதொன்றாகும்.
1977 முதல் ஒவ்வொரு ஆண்டிலும் இலங்கை வர்த்தகப் பற்றாக்குறையினைக் கொண்டிருந்துள்ளதுடன் வணிகப்பொருள் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கிடையிலான இடைவெளியானது பொதுவாக வெளிநாட்டு நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்களினாலும் (சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பணிகளிற்கான உட்பாய்ச்சல்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் போன்றன) மற்றும் நிதியியல் உட்பாய்ச்சல்களினாலும் (முதலீடுகள் மற்றும் கடன் பெறுகைகள் போன்றன) நிதியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், குறிப்பாக, உலகளாவிய நோய்த்தொற்றுடன் தொடர்புடைய அழுத்தங்கள் காரணமாக வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் சில பொதுவான வழிகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் சில அண்மைக்கால அபிவிருத்திகள் கீழ் விவரிக்கப்பட்டுள்ளவாறான பல்வேறுபட்ட கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன.