30 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கிடைத்த மாதிவெல உத்தியோகபூர்வ இல்லத்தில், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை குடியமர்த்தியுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகளில் வெளியாரை குடியமர்த்த வேண்டாமென நாடாளுமன்றம் அதிகாரிகள் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அண்மையில் அறிவித்தல் விடுத்திருந்தது.
அதேவேளை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்களில் குடியிருந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்திட்டத்திலும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் வீடுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சமிட் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் இல்லாத அமைச்சர்களுக்கு மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில் சமிட் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொண்டுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்கும்படி நாடாளுமன்ற அதிகாரிகள், அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கேட்டபோதும் இதுவரை அவர்கள் அந்தப் பட்டியலை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.