யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் 2505 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது.
2022 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ம் ஆண்டில் ஆயிரம் பேர் வரையானோருக்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்தது. யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.