வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பகுதியில் கடந்த 4 வருடங்களான சித்திரவதைக்கு உட்பட்ட 28 வயதுடைய யுவதியினை அப் பகுதி கிராம சேவையாளர் கஜேந்திரன் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
மெனிக்பாம் பகுதியில் வசித்து வந்த குறித்த யுவதிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குறித்த கிராம அலுவலகருக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து கிராம சேவையாளர் கஜேந்திரன் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த யுவதியினை மீட்டெடுத்து உடல் பரிசோதனைக்காக செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக யுவதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு வினாவிய போது, நேற்றையதினம் கிராம சேவையாளருடன் எமது பொலிஸ் பிரிவினரும் இணைந்தே குறித்த யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். தற்போது யுவதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். யுவதியிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் குறித்த பகுதி கிராம சேவையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது, எனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்து பொலிஸாரின் உதவியுடன் யுவதியினை மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் குறித்த பறயனாலங்குளம் பொலிஸார் மந்த கதியில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பெண்கள் பாதுகாப்பு திணைக்களங்கள் , அமைப்புக்கள் இணைந்து குறித்த யுவதிக்கு நியாயத்தினை பெற்று யுவதினை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புமாறு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.