வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில் எந்த மத நிகழ்வுகளையும் நடத்த முடியாதென தீர்மானம் எடுத்திருந்தது. இதையடுத்து, ஆரியகுளத்தில் 4 மதத்தின் பாடல்களையும் ஒலிபரப்ப வேண்டுமென ஆளுனர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த விடயம், யாழ் மாநகரசபையில் ஆராயப்பட்ட போது, ‘குளத்தை சுற்றி யாராவது பாட்டு போடுவார்களா?’ என மாநகரசபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததைடுத்து, ஆளுனரின் கோரிக்கையை நிராகரித்து, யாழ் மாநகரசபை கடிதம் அனுப்பியது. நிலையில், ‘கறார்’ தொனியில் வடக்கு ஆளுனர் யாழ் மாநகரசபைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் ஆரியகுளத்தின் உரிமையாளரை அடையாளப்படுத்தி ஆவணங்களுடன் தனக்கு சமர்ப்பிக்குமாறு யாழ் மாநகரசபைக்கு அறிவித்துள்ளார். அத்துடன், மத நிகழ்வுகளிற்கு அனுமதி பெற வேண்டுமென்ற யாழ் மாநகரசபையின் தீர்மானத்தை திரும்பப் பெற ‘கறாராக’ குறிப்பிட்டுள்ளார்.
மதத்தைத் தடை செய்தால் அல்லது குடிமக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதைத் தடுத்தால் அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் அரசியலமைப்பை மீறுவார்கள்.
மதத்தை அணுகுவதைத் தடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை திரும்பப் பெறாவிட்டால், ஆளுனர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆரியகுளத்தை பௌத்த அடையாளமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக பரவலான அச்சங்கள் எழுந்துள்ள நிலையில், ஆளுனரின் முயற்சியும் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஆளுனரின் இந்த ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ அணுகுமுறையால் வடக்கு நிர்வாக அதிகாரிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், யாழ் மாநகரசபையுடனும் மோதல் போக்கை ஆரம்பித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

