2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்படுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நவம்பர் 08ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதியின் வரவுசெலவுத்திட்ட மீதான உரை நவம்பர் மாதம் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்துள்ளார்.