2023ஆம் ஆண்டின் முதலாவது சட்டமூலத்தில் சபாநாயகர் (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தையே சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தினார்.
குத்தகை உடன்படிக்கையொன்றின் கீழ் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் தொடர்பான நடவடிக்கை முறைக்காக ஏற்பாடு செய்வதற்கும், குத்தகை, வாடகைகள், சேவை விதிப்பனவுகள் மற்றும் ஒழித்துக் கட்டப்பட்ட சேதவீடுகளின் நிலுவைகளை அறவிடுவதற்கான ஒழுங்குபடுத்துவதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்காக இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சட்டமூலம் கடந்த ஜனவரி 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் இச்சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தியதைத் தொடர்ந்து இது 2023 ஆம் ஆண்டு 01ஆம் இலக்க குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமாக இன்று (17) முதல் நடைமுறைக்கு வருகிறது