பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர், உரிமையாளரின் அலுவலகத்தில் இருந்த 2,175,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஊழியர் திருடப்பட்ட பணத்துடன் இரத்தினபிட்டிய விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி கார் ஒன்றை வாங்குவதற்காக கொள்வனவாளர் ஒருவர் முற்பணமாக குறித்த பணத்தொகையை கார் விற்பனை நிலைய உரிமையாளருக்கு வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், அதனை உரிமையாளர் பாதுகாப்பு கருதி அலுவலகத்தில் வைத்திருந்த போது சந்தேக நபர் அதனை திருடிச் சென்றுள்ளார்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு முன்பணம் கொடுத்த நபருடன் வாகனத்தைக் ஓட்டிக் காட்டுவதற்காக உரிமையாளர் விற்பனை நிலையத்தை விட்டு வெளியே சென்ற போதே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை விற்பனை நிலையத்தின் சிசிடிவி காட்சிகளில் சந்தேக நபர் தனது இடுப்பில் எதையோ வைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் இருந்து பதற்றத்துடன் வெளியேறுவது பதிவாகி இருந்தது.
எனினும் கைது செய்யப்படும் போது சந்தேகநபர் திருடப்பட்ட பணத்தில் சுமார் 75,000 ரூபாவை செலவு செய்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது மருமகளின் சத்திர சிகிச்சைக்கான பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 58 வயதுடைய பாதுக்க, வக பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.