மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று (17) 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மாவட்ட விசேட குற்றவியல் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவதினமான நேற்று மாலை ஆரையம்பதி அம்மன் கோவில் வீதியிலுள்ள குறித்த வீட்டை மாவட்ட விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 44 வயதுடைய கசிப்பு வியாபரியான பெண்னை கைது செய்ததுடன் மறைத்துவைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் மில்லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்வரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்