15 நாட்களாக பெற்றோல் வழங்கப்படாமை காரணமாக கவலை அடைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் கடந்த 5 தினங்களாக தொடர்ச்சியாக இராப்பகலாக வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் இணைந்து டோக்கன் வழங்க ஆரம்பித்தனர். காலை 9 மணியளவில் ஆரம்பித்த டோக்கன் வழங்கும் பணி இரவு 09 மணிவரை தொடர்ந்தது.
ஆனாலும் இலக்கமிடப்பட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு மாத்திரம் டோக்கன் வழங்கப்பட்டது. மிகுதியான இலக்கமிடப்பட்ட 300 மோட்டார் சைக்கிள்களுக்கு வருகை தந்ததை உறுதிப்படுத்தி துண்டுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இலக்கமிடப்படாத 500 இற்கும் மேற்பட்டவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் டோக்கன் வழங்கும் பணி இடம்பெற்று வருகின்றது. ஆனாலும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னரே நாட்டிற்கு எரிபொருள் கொண்டுவரப்படும் எனும் 2தகவலால் பெரும் கவலை அடைந்துள்ள பொதுமக்கள் தங்களை எரிபொருள் நிலையத்திலிருந்து அகற்ற எடுக்கும் செயற்பாடே டோக்கன் வழங்கும் திட்டம் எனவும் கூறுகின்றனர்.
அதோடு இராணுவத்தினர் வழங்கிய டோக்கனை பெற்றுக்கொண்ட டோக்கன் பயனளிக்குமா? அல்லது பயனற்றுப்பேகுமா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேவேளை எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.