கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் (First Class) தேர்ச்சி பெற்ற அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா 13 தங்கப் பதக்கங்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை இவர் தனதாக்கிக் கொண்டார்.
அத்தோடு குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் (Topper) ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 7/3 ஜ சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியான தர்ஷிகா இச்சாதனையை புரிந்து, பிறந்த மண்ணிற்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் கல்வி சமூகத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
அக்கரைப்பற்று விபுலானந்தா பாலர் பாடசாலையில் ஆரம்ப கல்வியை ஆரம்பித்த இவர் 5ஆம் ஆண்டுவரை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்திலும் உயர்தரம் வரை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையிலும் கல்வி பயின்றார்.
பாடசாலை கல்வி சாதனையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன், க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கில கல்வி மூலமாக 8A, 1B பெறுபேற்றை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து இவர் 2012 ஆம் ஆண்டு உயர் தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 3A சித்தியுடன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் மற்றும் தேசிய மட்டத்தில் 4 ஆம் இடம்பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியிருந்தார்
மேலும் கடந்த இறுதி ஆண்டு (Final MBBS) பரீட்சையில் சிறப்பு (Merit) தரவரிசையில் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தினையும் கொழும்பு மருத்துவ பீடத்தில் முதலிடமும் பெற்றார்.
இவ்வாறு பல சாதனைகள் படைத்து பெருமை சேர்த்த தர்ஷிகாவிற்கு பெற்றோரும் சகோதர சகோதரிகளும் உறவினர்களும் அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் இலங்கை மற்றும் உலகவாழ் மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருவதுடன் அவரது சேவையும் பிறந்த மண்ணை அலங்கரிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கின்றனர்.