கற்பிட்டி, முகத்துவாரம் பகுதியில் போக்குவரத்து உரிம விதிமுறைகளை மீறி லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு கட்டளையின் விஜய கடற்படையினர் வெள்ளிக்கிழமை (15) குறித்த பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அந்தப் பிரதேசத்தில் நின்ற சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தபோது, எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிகச் சிறிய அளவுடையது எனக் கூறப்படும் 1196 கிலோ 800 கிராம் உலர்ந்த கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன், குறித்த லொறியில் பயணித்த இருவரையும் சந்தேகத்தில் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47, 54 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி மற்றும் கொத்தாந்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்தொழில் திணைக்கள புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.