10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!
பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சி கொழும்பு கங்காராமை விகாரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த நிலையில் புனித நினைவுச்சின்னங்கள் இன்று (11) இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.
ஏழு நாட்கள் நடைபெற்ற கண்காட்சி தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையின்படி,
புனித நினைவுச்சின்னங்கள் திரும்பும் பயணத்தில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஸ்ரீ மங்குபாய் சி. படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் ஸ்ரீ சௌனா மெய்ன் ஆகியோர் உடன் சென்றனர்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சடங்கு ரீதியான புறப்பாடு நடைபெற்றது.
அங்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் புனித சின்னங்களுக்கு விடைபெறுவதற்காக கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, மத்தியப் பிரதேச ஆளுநர் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் தலைமையிலான இந்தியக் குழு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி மற்றும் வடமேற்கு மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய ஆகியோரைச் சந்தித்தது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனும் பிரமுகர்கள் கலந்துரையாடினர்.
இந்தக் கண்காட்சியை பெப்ரவரி 04 ஆம் திகதி கொழும்பில் உள்ள கங்காராமை விகாரையில் இலங்கையின் பிரதிநிதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா, இந்தியாவைப் பிரதிநிதியாக குஜராத் ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்ய தேவ்விரத் மற்றும் குஜராத் துணை முதல்வர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கங்காராமய விகாரையின் தலைமை குருவான வண. கலாநிதி கிரிந்தே அசாஜி தேரோ முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
ஒரு வார காலமாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித சின்னங்களை பார்வையிட்டு வழிபட்டனர்.
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பல அமைச்சரவை அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்காட்சியின் போது விகாரைக்கு சென்று புனித சின்னங்களை வழிபட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

