அம்பாறை – பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தூக்கிட்டு உயிர்மாய்த்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண்ணும் மற்றைய நபரும் நேற்று (12) அறை விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அருகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸார் வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
மேலும் குறித்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.